Apr 7, 2013

எனது சதுரகிரி மலை புனிதப் பயண அனுபவம் - 1




29-மார்ச்-2012 (வெள்ளி இரவு) புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி மலை மற்றும் ஆண்டாள் கோயில் சென்று தரிசித்து விட்டு 1-ஏப்ரல்-2012 (திங்கள் காலை) வருவதாக எங்கள் திட்டம். வர இயலாதவர்களை கழித்து விட்டு புதிதாக வந்தவர்களை ஒருங்கினைத்து என்ன என்ன கொண்டு வரவேண்டும், எப்படி போவது என திட்டம் வகுத்து 3 நாட்கள் முன்னரே மின்னஞ்சல் மூலமாக கிரிஷ் (மலையேற்ற அமைப்பாளர்) அனுப்பிவிட்டார். Coach spoc மட்டும் ரயில் டிக்கெட் Print எடுத்தால் போதும் என கிரிஷ் கூறிவிட்டார் (Go Green Policy)

சரவணமுத்துக்குமார் ஆகிய நான், பாலகிருஷ்ணன் என்கிற பாலா, பாலகிருஷ்ணன் என்கிற கிரிஷ் (மலையேற்ற அமைப்பாளர்), திருக்கழுக்குன்றம் சரவணன், NAT என்கிற நட்டு நடராஜ், சிவா, கார்த்திக் ராஜ் மற்றும் அவருடைய நண்பர் வெங்கடேஷ், வெங்கடேஷ்மணி, அருண் சார், சுரேஷ் சார் மற்றும் அவருடைய தம்பி, கிரிஷ் உடைய HP நண்பர்கள் அருண், ஹரி, முத்து பாலாஜி மற்றும் ஜியாதீன், கிரிஷ் உடைய அண்ணன் அருள்மணி, அவரது நண்பர்கள் குமார், ராம்குமார், மற்றும் ஞானசேகர், பாலு மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் என நாங்கள் மொத்தம் இருபத்து ஆறு பேர் கொண்ட பெரிய கும்பல் சதுரகிரி சென்று மகாலிங்கத்தை தரிசனம் செய்து விட்டு, மலையேற்றத்தின் மூலம் உடலை வலுவேற்றலாம் என புறப்பட்டோம்.

இம்முறை வெள்ளிங்கிரி மலை வந்த சுவாமி, ராம்ஜி, பருவதமலை வந்த ரமேஷ் சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த முறை வரவில்லை. அதற்கு பதிலாக வேறு சில நண்பர்கள் இணைந்து கொண்டார்கள். மலையேற்ற அமைப்பாளர் கிரிஷ் 26 பேரையும் கவனிக்க இயலாததால் Coachக்கு ஒருவர் என SPOC பிரித்து விட்டார். கிரிஷ், சிவா, பாலு தலைமையில் மூன்று Team.

கிரிஷ் வெள்ளி இரவு உணவை (இட்லி, சப்பாத்தி)ஆள் வைத்து தயார் செய்து 35 பொட்டலங்களாக கட்டி எடுத்துக்கொண்டார். கிரிஷ், பாலா, பாலு மற்றும் குமார் அண்ணா ஆகிய நால்வரும் சனி இரவு மலையில் அனைவரும் சாப்பிட புளியோதரையும் வீடுகளில் செய்து பொட்டலங்களாக பிரித்துக் கொண்டனர். மேலும் பாதி ரொட்டி & 2 ஜாம் என ஒவ்வொருவருக்கும் சிற்றுண்டி வேறு. இதுவெல்லாம் போதாதென்று சதுரகிரி கஞ்சிமடத்திற்கு போன் செய்து அன்னதானத்திற்கு வேறு கிரிஷ் ஏற்பாடு செய்து விட்டார். ஆக போஜனத்திற்கு பஞ்சமில்லை. ஆரம்பம் முதலே சாப்பாட்டைப்பற்றி பேசி வந்த நண்பர் வெங்கடேஷ்மணிக்கு இதில் அளவில்லா ஆனந்தம். அலுவலகத்திலேயே காபி குடிக்க 2 லிட்டர் mug எடுத்து வருபவராயிற்றே. ஆகவே அவருக்கு சோற்றுச்சித்தர் என்ற பட்டத்தை நமது மலையேற்றக்குழுவின் மூலம் வழங்குவதில் பெருமை அடைகிறோம்.





சோற்றுச்சித்தர்



29-மார்ச்-2012 அனைவரும் எழும்பூர் ரயிலடியில் ஒன்று சேர்ந்து 12661 – பொதிகை ரயிலில் இரவு 8:05 அளவில் புறப்பட்டோம். திருக்கழுக்குன்றம் சரவணன் செங்கல்பட்டிலும், NAT என்கிற நட்டு நடராஜ் தாம்பரத்திலும் ஏறுவதாக கூறினார்கள். அனைவரும் Original Identity card கொண்டு வரச்சொல்லியும் சிலர் மட்டுமே கொண்டுவந்தனர். Ticket மட்டும் நிறைய பேர் Print எடுத்து வந்தனர். சிவா Coachல் 12 பேரில் Original Identity card அனைவரிடமும் இல்லாததால் ஒரு PNRல் Problem. சிவா மொத்தமாக காட்ட TTRக்கு சந்தேகம் வந்து விட்டது. அவர் நிறைய கேள்விகள் கேட்க சிவா பதற்றமாகி விட்டார். எல்லோரும் போய் அவரவர் சீட்டில் அமருங்கள் நான் வந்து தனித்தனியாக் செக் செய்கிறேன் என கூறிவிட்டார். 6 பேர் கொண்ட PNR ல் நடராஜ் இடம் மட்டுமே Original Identity card இருந்தது. அவரோ தாம்பரத்தில் தான் ஏறுவார். என்ன செய்வதென தெரியவில்லை. மற்றவர்களிடம் நகல் மட்டுமே உள்ளது. TTR செக்கப் செய்து கொண்டே வர தாம்பரம் வந்துவிட நடராஜ் Coach ல் ஹீரோ போல் ஏறி காப்பாற்றிவிட்டார். பிறகு எல்லோரும் சாப்பிட்டுவிட்டு உறங்கினோம்.
 
 

காலை 7:00 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயிலடியில் இறங்கி Tea சாப்பிட்டுவிட்டு ஷேர் ஆட்டோ மூலமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் வந்து காலை கடன்களை முடித்து வத்திராய்ப்பு செல்லும் பேருந்தில் ஏறி வத்திராய்ப்பு வந்து காலை டிபன் முடித்துவிட்டு கொஞ்சம் டிபன், புளியோதரைக்கு வடை பார்சல் செய்து கொண்டோம். தாணிப்பாறை செல்ல மினி பேருந்து வந்தது. 26 பேர் சாப்பிட்டு வருவோம் என ஓட்டுனர், நடத்துனரிடம் கூற புறப்பட்ட பேருந்தை 20 நிமிடம் நிறுத்திவைத்து எங்களை அழைத்துசென்றார். இவ்வாறாக மகாலிங்கம் அருளால் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் தாணிப்பாறை சென்றடைந்தோம். இங்கிருந்து தான் மலையேற்றம் ஆரம்பம் ஆகிறது. தாணிப்பாறையிலிருந்து அடிக்கடி மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கின்றன.





 


--பயணம் தொடரும்

No comments: