Jan 2, 2013

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 3

முந்தைய பகுதிகள்

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 1

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 2






சோ வென மழை ஆரம்பித்தது. நமது சென்னையில் மழை பெய்தால் வெள்ளம் வரும். சாலைகளில் தண்ணீர் தேங்கும். ஒதுங்க இடம் இருக்கும். ஆனால் இது போன்ற மலை பகுதிகளில் மண், பாறைகள் வழுக்கும். காட்டு வெள்ளம் வரும். ஒதுங்க இடம் இருக்காது. எப்போது மழை நிற்கும் என தெரியவில்லை. நனைந்து கொண்டே நடக்க தொடங்கினோம். கொண்டு சென்ற பை வேறு நனைந்து, இருக்கும் சுமை போதாதென்று அதுவும் ஒரு பெரிய சுமை ஆனது.

வழிகாட்டி



ஆளரவமற்ற அந்தப் படிக்கட்டுப் பாதை முடிந்து வெறும் கரடுமுரடான கற்களாலான காட்டுவழிப் பாதை ஆரம்பித்தது. மலைப்பாதையில் (இது பாதையே அல்ல. மழை பெய்தால் வெள்ளம் புரண்டு வரும் வழிதான்) ஒருமணி நேரம் நடந்தோம். அதில் பாதிதூரம் சென்றதும்,வெறும் மொட்டைமலை நெடுநெடுவென செங்குத்தாக உயர்ந்து நிற்கிறது.

இரண்டாவது மலை கற்களாலான காட்டுவழிப் பாதை


கல்மேடை



தொடர்ந்து நடந்து வந்ததாலும், படிகளற்ற பாறைகளினூடாக, மக்கள் நடந்து நடந்து அமைத்த பாதைகளில் ஏறி வந்ததாலும் மூச்சு இரைத்தது. "இந்த மலைப்பிரதேச மூலிகைக் காற்று உடம்பினுள் சென்று வருவதால், உடம்போடு உள்பாகங்கள் சுத்திகரிக்கப்பட்டு வலுவடைகின்றன. நாள்பூராவும் மூச்சுவிட நேரமின்றி உழன்று, உட்கார்ந்து உழைத்து கொண்டிருக்கும் நமக்கு இது மாதிரி மலையேற்றம்தான் சரியான உடற்பயிற்சி. ஆரோக்கியமானதும்கூட’’என்று எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது.


மூன்றாவது மலை




காலை 8:00 மணி அளவில் கடப்பாறைப்படி ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். கடப்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படி என விதவிதமான பெயர்கள் அந்த வளைந்த பாதைகளுக்குப் பெயராக அமைந்திருக்கின்றன.
இரண்டு வழிகள்:- ஒன்று சரிவாக வளைந்து வளைந்து செல்லும் படிக்கட்டுப் பாதை, நடு நடுவில் இரும்பாலான ஏணிகளும் உண்டு. மற்றொன்று, செங்குத்தான பிடிவிட்டுவிட்டால், கயிலாயத்திற்கு டிக்கெட் வழங்கும் கடப்பாறை பாதை. கடப்பாறையை பாறையில் குத்தி சங்கிலி போட்டு இரும்பாலான ஏணிகள் வைத்த, பாறையிலேயே பாதம் வைக்கும் அளவுக்கு செதுக்கிய படிகள் கொண்ட கடப்பாறை பாதை.இந்த இடம் 120 டிகிரி சாய்வாக இருக்கும். இதில் பாறையில் துளை போட்டு கடப்பாறைகளை நட்டு அவற்றை சங்கிலிகளால் பிணைத்திருப்பார்கள். மாபெரும் திரிசூலங்களும், ஆணிகளும், தண்டுக்கால் கம்பிகளுமே நம்மை மேலே பயணிக்க உதவுகின்றன. அந்த சங்கிலிகளைப் பிடித்துக்கொண்டு தான் ஏற வேண்டும்.

கடப்பாறைப்படி



தண்டவாளப்படி



 பயணம் தொடரும்....!

No comments: